நாட்டுக்கு நாடு தேதியை எழுதும் வகையில் வேறுபாடு இருப்பதால் விண்டோஸ் மற்றும் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்புகளில் நாளினை எப்படி குறிப்பது என்பதனை நம் விருப்பத்திற்கு விட்டுவிட்டு அதனை அமைப்பதற்கான வசதிகளையும் தந்து விடுகின்றனர். எம்.எஸ்.எக்ஸெல் தொகுப்பில் நாள் மற்றும் கிழமையை எப்படி அமைப்பது என்று பார்க்கலாம்.
எக்ஸெல் தொகுப்பில் பைல் ஒன்றைத் திறந்து கொண்டு முதலில் எந்த செல்களில் தேதிக்கான பார்மட் அமைக்கப்பட வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். Format மெனு சென்று Cells என்பதைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் Format Cells டயலாக் விண்டோவில் Number டேபினைத் தேர்ந்தெடுக்கவும். இதன் இடது பக்கம் சில டேட்டா வகைகள் (categories) தரப்பட்டிருக்கும். இந்தப் பட்டியலில் Custom என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் வலது பக்கம் Type என்பதைக் கிளிக் செய்திடவும். இங்கு நீங்கள் விருப்பப்படி தேதியை பார்மட் செய்வதற்கு வசதி உள்ளதா எனப் பார்க்கவும். இங்கு Date என்ற பிரிவு கிடைக்கும். இந்த பிரிவில் செல்லும் முன் தேதியை எப்படி எல்லாம் அமைப்பது என்று தெரிந்து கொள்வோம். அதற்கான குறியீடுகளைப் பார்க்கலாம். d என்பது தேதியின் எண்ணைத் (1,2,3 .... 31) தரும். dd என்பது தேதியை இரண்டு இலக்கங்களாகத் (01,02,03 ..31) தரும். ddd என்பது கிழமையினைச் சுருக்கித் (Mon, Tue . . .) தரும். dddd என்பது நாளினை முழுமையாகத் தரும்.
மாதங்கள் பெயரை அமைக்கும் குறியீடுகள்: m என அமைத்தால் மாதத்தின் எண் (1, 2, 3 ... 11, 12) கிடைக்கும். mm என்பது மாதங்களின் எண்களை (01, 02 ... 12) இரு இலக்கத்தில் தரும். mmm என்பது மாதத்தின் பெயரைச் (Jan, Feb) சுருக்கித் தரும். மாதங்களின் பெயரை முழுமையாகப் (January, February) பெற mmmm என அமைக்க வேண்டும். மாதத்தின் பெயரின் முதல் எழுத்தை மட்டும் பெற mmmmm என அமைக்க (J, F, M, A) வேண்டும்.
ஆண்டுகளை எப்படி அமைப்பது? yy என்பது ஆண்டுகளை இரு இலக்கங்களில் (07, 08) குறிக்கும். yyyy என அமைத்தால் ஆண்டுகள் 4 இலக்கங்களில் முழுமையாகக் கிடைக்கும்.
சரி, குறியீடுகளைத் தெரிந்து கொண்டீர்கள். இனி இவற்றின் துணை கொண்டு நாள், கிழமையை எப்படி அமைப்போம் என்று பார்ப்போம். வகைகளைப் பார்க்கையில் Custom என்பதில் கிளிக் செய்தீர்கள் அல்லவா? அப்போது வலது பக்கம் Type என்பதன் அருகே தேதிக்கான பார்மட் ஒன்றைக் கவனித்திருக்கலாம். இதில் மேலே தரப்பட்ட குறியிடுகளைக் கலந்து அமைத்தால் நமக்கு தேவையான வடிவமைப்பில் நாள் மற்றும் கிழமை கிடைக்கும். எடுத்துக்காட்டாக dddd, mmmm d, yyyy என அமைத்து அந்த செல்லில் 52611 என டைப் செய்தால் Thursday, May 26, 2011 எனக் கிடைக்கும். ஒன்றை இங்கு கவனிக்க வேண்டும். பார்மட்டில் டைப் செய்யப்படும் டேட்டாக்களைப் பிரிக்க ஸ்பேஸ் மற்றும் கமா அமைத்தால் அவை அப்படியே காட்டப்படுகின்றன. இந்த இடத்தில் சிறிய இடைக்கோடு ( – ஹைபன்) நெட்டு சாய்வு கோடு (/ ஸ்லாஷ்) போன்றவற்றையும் அமைக்கலாம். இதனை அமைக்கையில் அருகே Sample என்ற கட்டத்தைப் பார்க்கலாம். இதில் டேட்டா எப்படி அமையும் என்ற முன் மாதிரி காட்டப்படும். இந்த சாம்பிள் டைப் பீல்டுக்கு மேலே இருக்கும். இந்த வகை அமைப்பை அமைத்திடுகையில் அதற்கான செல்லில் டேட்டா இருந்தால் நீங்கள் பார்மட்டை அமைக்கையிலேயே அதற்கேற்றார்போல் அது மாறுவதைக் காணலாம்.
நாளும் கிழமையும் எக்ஸெல்லில் அமைப்பதைக் கற்றுக் கொண்டீர்களா. நல்லது. அனைவருக்கும் நாளும் கிழமையும் நல்லதாக அமையட்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக