புதன், 24 ஆகஸ்ட், 2011

சுகர் பேசன்ட்ஸ் (சர்க்கரை நோயாளிகளே) கண்களை கவனியுங்கள்...


உலக அளவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை இந்தியாவில் தான் அதிகமாக உள்ளது. இது இன்னும் பன்மடங்கு அதிகரிக்கக்கூடும். இன்று ஒரு இந்தியரின் சராசரி ஆயுள்காலம் 65 வயது. ஆனால் சர்க்கரை நோய் இந்தியர்களை 30 முதல் 35 வயதிலேயே தாக்கத் தொடங்கி விடுகிறது.

சர்க்கரை நோய் மற்ற நாடுகளிலுள்ளவர்களைக் காட்டிலும் 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்தியர்களுக்கு வருகிறது. எனவே இந்நோய் இந்திய நாட்டிற்கே பெரும் பொருளாதார சுமையை ஏற்படுத்தக்கூடியதாகும்.

சர்க்கரை நோய் உடலில் அனைத்து உறுப்புகளை யும் பாதிக்கும். எனினும் இருதயம், சிறுநீரகம் மற்றும் கண்களில் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும். இந்த மூன்று உறுப்புகளில் ஏற்படும் பாதிப்பு அந்த மனிதரின் ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கும். கண்ணில் சர்க்கரை நோயினால் ஏற்படும் பாதிப்பு `டயாபடிக் ரெட்டினோபதி` என்று அழைக்கப்படுகிறது.

சர்க்கரை நோய் கண்களை பாதிப்பது எப்படி?

 

உடலில் சர்க்கரையின் அளவு மிக அதிகமானால் கண்ணில் உள்ள ரத்த நாளங்களிலிருந்து நீர் விழித்திரையினுள் கசியும். அதனால் நாளடைவில் விழித்திரையில் வீக்கம் ஏற்பட்டு பார்வைக் குறைவு ஏற்படும். இதை ஆரம்பக் கட்டத்திலேயே சரி செய்யாவிடில் விழித்திரையில் தழும்பு ஏற்பட்டு நிரந்தர பார்வை இழப்பு தோன்றும். சிலருக்கு சர்க்கரை நோயின் விளைவாக கண்ணினுள் ரத்தக்கசிவு ஏற்பட்டு பார்வை பறிபோகும்.

ஒருவருக்கு சர்க்கரை நோய் உள்ளது என்று தெரியவந்தால் உடனடியாக கண்பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிக அதிகமாக இருந்தால் கண்ணில் பாதிப்பு மிக விரைவாக ஏற்படும். சர்க்கரை நோயாளி ஒருவருக்கு சர்க்கரையின் அளவு நீண்டகாலமாக சீரான கட்டுப்பாட்டில் இருந்தாலும் அவருக்கும் பார்வை குறைபாடு ஏற்படக்கூடும் என்பது சர்க்கரை நோயின் விசித்திரமான அம்சமாகும்.

டயாபடிக் ரெட்டினோபதியின் அறிகுறிகள் என்ன?

 

இந்நோய் இருப்பவர்களுக்கு ஆரம்ப கட்டத்தில் எந்தவிதமான அறிகுறியும் தெரியாது. சிறிது காலம் சென்ற பிறகு பார்வைக்குறைவு ஏற்படும். பார்க்கும் பொருட்கள் எல்லாம் வளைந்தது போல் காணப்படும். சிகிச்சை செய்யாமல் போனால் நிரந்தரப் பார்வைக் குறைபாடு உருவாகக்கூடும்.

டயாபடிக் ரெட்டினோபதியால் கண்களில் ஏற்படும் பாதிப்பை எவ்வாறு கண்டறிய முடியும்?

 

சர்க்கரை நோய் ஒருவருக்கு உள்ளது என்று தெரிந்தவுடனே அவர், கண் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். விழித்திரையை ஆப்தல்மோஸ்கோப் (Ophthalmoscope) என்ற கருவியின் உதவியுடன் மிகத் துல்லியமாக பரிசோதனை செய்ய முடியும். விழித்திரையில் ஏற்பட்டுள்ள பாதிப்பை புகைப்படங்கள் (Fundus Photograph) மூலமும் பதிவு செய்ய இயலும். விழித்திரையில் ஏற்படும் நீர்க்கசிவையும், சோதனை மூலம் கண்டறியலாம். மேலும் விழித்திரையிலுள்ள சகல விதமான பாதிப்புகளையும் `ஓசிடி' (Oct) என்ற கருவியின் மூலம் கண்டறியலாம். இது கண்ணில் செய்யக்கூடிய ஒருவித ஸ்கேன் ஆகும்.


டயாபடிக் ரெட்டினோபதியை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் பார்வை பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம். விழித்திரையில் லேசர் உதவியுடன் நீர்க்கசிவை குறைக்க முடியும். தற்போது லேசர் தவிர புதிய மருந்துகளை கண்களுக்குள் நேரடியாகவே ஊசி மூலம் செலுத்தியும் இந்த நோயை குணப்படுத்த இயலும். பாதிப்பு அதிகமாக இருந்தால் அறுவைச் சிகிச்சை செய்ய நேரிடும்.

டயாபடிக் ரெட்டினோபதி வராமல் எப்படி தவிர்க்கலாம்?

 

சர்க்கரை நோய் உள்ள அனைவரும் உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும். அவ்வப்போது சர்க்கரையின் அளவை பரிசோதனை செய்து மருத்துவரின் ஆலோசனையின்படி மருந்துகளை தவறாது உட்கொள்ள வேண்டும். சர்க்கரை உள்ளது என்று கண்டறியப்பட்ட உடனே கண்பரிசோதனை செய்து கொள்வது மிகவும் அவசியம்.


இதை தவிர்த்து வருடத்திற்கு ஒரு முறையாவது கண் பரிசோதனை செய்து கண் சிகிச்சை நிபுணரின் ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும். சர்க்கரை நோய் என்பது கட்டுக்குள் இருக்கும் நோயே தவிர நிரந்தரமாக குணமாகாது. எனவே சர்க்கரை நோயாளிகள் வாழ்நாள் முழுவதும் (அவ்வப்போது) கண் பரிசோதனை மற்றும் சிகிச்சைகளை செய்து வர வேண்டும்.

பார்வைக் குறைபாட்டை ஏற்படுத்தும் நோய்களில் மிகவும் கவனிக்கத் தகுந்தது "க்ளோக்கோமா''. இது கண்நீர் அழுத்த நோயாகும். இந்த நோய் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே மிகக் குறைவாகவே உள்ளது. அதனால் இந்த நோய் மிக மோசமான பார்வைக் குறைபாட்டை ஏற்படுத்துகிறது.

க்ளோக்கோமா பாதிப்பு எப்படி ஏற்படுகிறது?

 

எல்லோருக்கும் கண்ணில் இயல்பாகவே அழுத்தம் (பிரஷர்) உண்டு. இந்த அழுத்தம் 6-21 மி.மி. இருக்க வேண்டும். கண்ணில் `ஆக்வஸ்யூமர்' என்ற திரவம் உள்ளது. இது ஓரிடத்தில் உற்பத்தி ஆகி கண்ணினுள் பாய்ந்து பரவி, மற்றொரு பகுதி வழியாக வெளியேறும். இந்த `ஆக்வஸ்யூமர்` திரவம்தான் கண் அழுத்தத்தை சமச்சீராக்குகிறது. இந்த திரவத்தின் உற்பத்தி அதிகமானாலோ, அது பாய்ந்து வெளியேறும் பகுதிகளில் அடைப்பு அல்லது பழுது ஏற்பட்டாலோ கண்ணில் அழுத்தம் அதிகமாகும். இதுவே க்ளோக்கோமா ஏற்படுவதற்கான காரணமாகும்.


கண்களில் அழுத்தம் அதிகமாகும்போது அது கண்ணிலுள்ள பார்வை நரம்பை பாதிக்கிறது. பார்வை நரம்பு பாதிப்பதானால் பக்க பார்வை (Side Vision) குறைபாடு ஏற்படும். இந்த பாதிப்பு ஏற்பட்டுவிட்டால் சிகிச்சை ஆரம்பித்தாலும் முழுமையாக இதனை சரி செய்ய முடியாது. இந்த நோய் ஆரம்ப கட்டத்தில் எந்தவித அறிகுறியையும் ஏற்படுத்தாது. நோய் முற்றிய பிறகே அவருக்கு பார்வைக்குறைபாடு தோன்றும்.

யாருக்கு, எத்தனை வயதில் இந்த நோய் தோன்றும்?

 

யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வரும் வாய்ப்புகள் அதிகம். சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்கும் கண்களில் அடிபட்டு காயம் ஏற்பட்டவர்களுக்கும், `ஸ்டெய்ராய்டு' வகை மருந்துகளை உட்கொள்பவர் களுக்கும் இந்த நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த நோய் பரம்பரையாகவும் வரும் தன்மை கொண்டது.


இதில் `ஓபன் ஆங்கிள் க்ளோக்கோமா', `குளோஸ்டு ஆங்கிள் க்ளோக்கோமா', `செகண்ட்ரி க்ளோக்கோமா' என்று மூன்று வகை உண்டு.


முதல்வகை க்ளோக்கோமா, நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வரலாம். இந்த பாதிப்பு கொண்டவருக்கு `ஆக்வஸ்யூமர்' திரவம் கண்ணுள் பாய்ந்து வெளியேறும் பாதை திறந்தே காணப்படும். ஆனால் அது செயலிழந்து இருக்கும். இந்த நோய் மிக மெதுவாகவே அதன் பாதிப்பை உணர்த்தும்.

இரண்டாவது வகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்ணினுள் `ஆக்வஸ்யூமர்' பாய்ந்து வெளியேறும் பாதையில் அடைப்பு ஏற்பட்டிருக்கும். இது பெண்களுக்கு அதிகமாக காணப்படுகிறது. பெண்களின் குறுகிய கண் அமைப்பே இதற்கு காரணம். கண்ணீர் வெளியேறும் பாதையில் அடைப்பு ஏற்படுவதால் கண்ணில் அழுத்தம் மிகவேகமாக உயரும். எனவே இந்தவகை பாதிப்பு கொண்டவர்களுக்கு கண்ணில் வலி, தலைவலி, வாந்தி ஏற்படும். லேசர் செய்து அப்பாதையில் உள்ள அடைப்பை நீக்க வேண்டும். கண்ணில் அடிபட்டால் ஸ்டெய்ராய்டு வகை மருந்துகளை உட்கொண்டால் `செகண்ட்ரி க்ளோக்கோமா' தோன்றலாம்.


க்ளோக்கோமா வகை நோய்களை வரும்முன் காப்பதே நல்லது. இந்த நோய் உள்ளவர்களுக்கு ஆரம்ப கட்டத்தில் அறிகுறி எதுவும் தெரியாது. சிலருக்கு தலைவலி, இரவு நேரங்களில் பார்வைக்குறைபாடு ஏற்படும். ஆரம்பத்திலே கண்டுபிடித்து சிகிச்சை பெறுவதே ஆரோக்கியத்திற்கு ஏற்றது.


- விளக்கம்: டாக்டர் அருள்மொழிவர்மன், M.S, D.O.,
                        கண்சிகிச்சை நிபுணர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக