வெள்ளி, 3 செப்டம்பர், 2010

வலைத்தள வங்கி - பேபால்

வலைத்தள வங்கி - பேபால்


நீங்கள் இணைத்தளங்களில் நடைபெறும் ஏலங்களில் பங்கு பெற விரும்புகிறீர்களா? இணைத்தளத்தில் பணிபுரிந்து சம்பாதிக்க விரும்புகிறீர்களா அல்லது இணைத்தளங்கள் மூலம் Shopping செய்ய ஆசையிருக்கிறதா உங்களுக்கு? இவை எல்லாவற்றையும் எளிதாக்குகிறது இணையதளத்தில் பணப்பரிமாற்றம் செய்ய உதவும் பேபால் கணக்கு (Paypal Account).

பேபால் கணக்கு என்றால் என்ன? அதை எப்படித்துவங்குவது, அதனால் என்னென்ன பயன்கள் என்றெல்லாம் தெரிந்து கொள்ளலாமா?

பேபால் என்பது வங்கி போன்ற ஒரு நிறுவனம். நீங்கள் அதில் பணம் செலுத்தலாம், பணத்தை எடுக்கலாம். ஒரு கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிற்கு மாற்றலாம். நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு அதன் மூலம் பணம் செலுத்தவும், விற்கும் பொருட்களுக்கு அல்லது செய்யும் சேவைகளுக்கு அதன் மூலம் பணத்தைப் பெறவும் முடியும். சுருக்கமாகச் சொன்னால் இணைத்தளத்தில் பணப் பரிமாற்றம் செய்ய உதவும் ஒரு நிறுவனமே பேபால் ஆகும். பழைய காசோலைகளுக்கும் வரைவோலைகளுக்கும், பணவிடைகளுக்கும் மாற்றாக அமைந்த, டிஜிடல் முறையில் பணப்பட்டுவாடா செய்ய உதவும் இ-காமர்ஸ் நிறுவனம் இது.

paypal_imagesபேபால் கணக்கில் நீங்கள் உங்கள் கடன் அட்டை, இணையப்பரிமாற்ற வசதி உள்ள வங்கிக் கணக்கு, உங்கள் பற்று அட்டை இவற்றின் மூலமாகவோ, குறிப்பிட்ட சில நாடுகளில் உள்ளவர்கள் காசோலை மூலமாகவோ கூட பணத்தைச் செலுத்த முடியும். இவ்வாறே பேபாலில் உள்ள உங்கள் பணத்தை உங்கள் வங்கிக்கு மாற்றவும் வசதிகள் உள்ளன. பேபாலில் நாம் செய்யும் பரிவர்த்தனைகளுக்கு நாம் ஒரு குறிப்பிட்ட கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும்.

மார்ச் 2000ம் ஆண்டில் தொடங்கப்பட்ட நிறுவனமான இது 2002இல் இ-பேயின் துணை நிறுவனமாக (Subsidiary) மாறியது. 2008ஆம் ஆண்டு இணைத்தள மோசடிகளைத் (Internet Frauds) தடுக்கும் பொருட்டு ஃப்ராடு சயன்சஸ் என்னும் இஸ்ரேல் நிறுவனத்தைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது. பேபால் இன்று ஏறத்தாழ 13 நாடுகளின் 190 சந்தைகளில் வர்த்தகம் செய்து வருகிறது. கிட்டத்தட்ட 184 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. இந்நிறுவனம் பத்தொன்பது கரன்சியில் கணக்கு வைத்துக்கொள்ளும் செய்யும் வசதியைப் பெற்றுள்ளது. மேலும், எந்தக் கரன்சியிலும் மாற்றி நமது கணக்கில் சேர்க்கும் வசதியையும் இந்நிறுவனம் நமக்கு அளிக்கிறது. பாதுகாப்பாக பணப்பரிமாற்றம் செய்ய இந்நிறுவனம் சிறப்பான 'Security Key' முதலியவற்றை அறிமுகம் செய்துள்ளது. இன்று இணைத்தளங்களில் எளிதாகவும், விரைவாகவும் பாதுகாப்பாகவும் பரிமாற்றம் செய்ய உதவும் நிறுவனங்களில் பேபால் முதலிடம் வகிக்கிறது. சொல்லப் போனால், பேபாலுக்கு இணையான வேறு பணப்பரிமாற்றத் தளங்களே இல்லை எனலாம். இத்தகைய இணையற்ற சேவைக்காக இருபதுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ள இந்நிறுவனத்தின் தலைமையகம் கலிஃபோர்னியாவில் அமைந்துள்ளது.

பேபால் கணக்கினைத் துவங்குவது எப்படி? (How to open Paypal (Account)
பேபால் கணக்கைத் தொடங்க, வங்கிக்கணக்கு அல்லது கடன் அட்டை எண் இவை முதலில் தேவையில்லை. உங்கள் மின்னஞ்சல் முகவரியே போதும்.
முதலில் பேபால் முகப்புப்பக்கத்திற்குச்செல்லவும். (www.paypal.com) பிறகு புகுபதிகையைச் சொடுக்கவும்.(Click Signup). உங்கள் நாடு அல்லது மண்டலத்தை அதில் கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் இருந்து தேர்ந்தெடுக்கவும்.(Select your country and region from the list.) உங்களுக்கு எந்த வகையான கணக்கு தேவையோ அதைத் தேர்ந்தெடுக்கவும். (Personal, Business or Premium). தனிநபர்களின் சாதாரணமான பணப்பரிமாற்றங்களுக்கு பர்சனல் கணக்கு போதுமானது. தனிநபர்கள் இணைத்தளத்தில் வர்த்தகம் செய்ய ப்ரீமியம் கணக்கு துவங்கவேண்டும். Business வகை நிறுவனங்களுக்கானது.
கணக்கு வகையைத் தேர்ந்தெடுத்த பின் உங்களைப் பற்றிய தகவல்களை நிரப்பவும். உங்கள் தகவல்கள் சரியானதாகவும், உங்கள் வங்கிக்கணக்கில் உள்ள விவரங்களுடன் ஒத்திருப்பதும் முக்கியம். குறிப்பாக உங்கள் பெயர், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி தவறின்றி இருத்தல் வேண்டும். நீங்கள் பிறருக்குப் பணம் செலுத்துபவராகவோ, அதிக அளவு தொகை பரிமாற்றம் செய்பவராகவோ இருந்தால் உங்கள் கடன் அட்டை விவரங்களைக் கொடுப்பது அவசியம்.

பணம் எடுப்பது எப்படி?

paypalபேபாலில் இருந்து பணம் எடுக்க மூன்று வழிகள் உள்ளன. உங்கள் நாட்டிற்கு ஏற்றவாறு வழிமுறைகள் மாறுபடலாம். உங்கள் வங்கிக்கணக்கு விவரங்களைக் கொடுத்தால், பேபாலில் இருந்து பணம் எடுக்க விரும்பும் ஆணையைக் கொடுத்தால் (Withdraw Option) பணம் உங்கள் கணக்கிற்குp பட்டுவாடா செய்யப்பட்டுவிடும்.சில நாடுகளில் கடன் அட்டை மூலமாகவோ, பேபால் காசோலை (Cheque) அல்லது பேபால் பற்று அட்டை (Debit Card) மூலமாகவும் பணம் எடுக்க வசதியுள்ளது. மூன்று முதல் ஐந்து நாட்களுக்குள் பணப்பட்டுவாடா நடந்துவிடும். ஒரு பேபால் கணக்கில் இருந்து மற்றொரு பேபால் கணக்கிற்கும் பணத்தை மாற்றும் வசதி உண்டு. இதில் பெர்சனல் கணக்கு மூலம் நடக்கும் பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் மிகவும் குறைவு.

பேபால் கணக்கின் பயன்கள்:
பேபால் கணக்கு நீங்கள் இணைத்தளத்தின் மூலமாக உலகில் எந்த மூலையில் இருக்கும் யாருக்கு வேண்டுமானாலும் பணம் அனுப்பவோ, பணத்தைப் பெற்றுக்கொள்ளவோ உதவுகிறது. நீங்கள் இணைத்தளத்தின் மூலமாக ஏதேனும் வாங்கினால், பாதுகாப்பாகப் பணம் செலுத்த உதவுகிறது. உங்கள் கடன் அட்டை எண் (Credit Card Number), வங்கிக் கணக்கு எண் (Bank Account Number) இவற்றை விற்பனையாளர்களுக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லாததால், உங்கள் பரிமாற்றம் (Transaction) மிகுந்த பாதுகாப்பானதாக மாறுகிறது. உங்கள் தனிப்பட்ட விவரங்கள், உங்கள் கணக்கில் உள்ள தொகை இவை ரகசியமாக வைக்கப்படுகின்றன. மொத்தத்தில் சொல்லப்போனால் பேபால் பரிவர்த்தனைகள் உங்கள் கடன் அட்டைப் பரிமாற்றங்களை விட பாதுகாப்பானது, விரைவானது மற்றும் மலிவானது.

வாழ்க வளமுடன்

வியாழன், 2 செப்டம்பர், 2010

இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி? - 2-கூகிள் ஆட்சென்ஸ்

இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி? - 2-கூகிள் ஆட்சென்ஸ்




google-adsenseஇந்தக் கட்டுரைத் தொடரில் நாம் விளம்பரங்களில் சொல்வது போல், நீங்கள் உங்களுக்கு வரும் மின்னஞ்சலைப் படிப்பதன் மூலமாகவோ, மின்னஞ்சல் அனுப்புவதன் மூலமாகவோ, விளம்பரங்களைச் சொடுக்குவதன் மூலமாகவோ சுலபமாகப் பணம் சம்பாதிக்கலாம் என்று சொல்லப்போவதில்லை. இங்கு நாம் பார்க்கப்போகும் வழிமுறைகள் உண்மையாகவே நீங்கள் வேலை செய்து சம்பாதிக்கக் கூடிய வழிகள். நியாயமான வருமானத்தை இணையத்தைப் பயன்படுத்திப் பெறுவது எப்படி என்றுதான் நாம் தெரிந்துகொள்ளப்போகிறோம்.

முதலில் நாம் பார்க்கப்போவது 'Google Adsense'. இணைத்தளங்கள் வைத்திருக்கும் யாராயிருந்தாலும், தமது தளங்களில் கூகிளுடைய விளம்பரங்களை வெளியிடுவதன் மூலம் பணம் சம்பாதிக்கும் வழி இது. கூகிள் விளம்பரங்களை அந்தத் தளங்களில் வெளியிடும் அதே நேரத்தில், உங்கள் தளத்திற்கு வருபவர்கள் தங்களுக்குத் தேவையான தேடுதல்களை மேற்கொள்ளவும் கூகிள் ஆட்சென்ஸ் (Google Adsense) வழி செய்கிறது.

உங்கள் தளம் எதைக்குறித்தது, அதில் வெளியிடப்படும் விளம்பரங்கள் எத்தகையவை, இவற்றின் அடிப்படையில், உங்கள் தளத்தைப் பார்வையிடுபவர் அதில் உள்ள கூகிள் ஆட்சென்ஸ் விளம்பரங்களைச் சொடுக்குகையில் உங்களுக்கு வருமானம் கிடைக்கிறது.

கூகிள் ஆட்சென்ஸ் (Google Adsense) என்றால் என்ன? அது ஏன் உங்களுக்குப் பணம் கொடுக்கவேண்டும்?

உலகமுழுவதும் உள்ள பல நிறுவனங்கள், கூகிள் தங்களைப்பற்றிய விளம்பரங்களை வெளியிடப் பணம் கொடுக்கின்றன. இது 'கூகிள் ஆட்வேர்ட்ஸ்' (Google Adwords) எனப்படுகிறது. கூகிளில் நீங்கள் எதையாவது தேடுகையில் உங்கள் வலப்புறத்தில் நீங்கள் பார்ப்பது இந்த ஆட்வேர்ட்ஸ்தான். இந்த ஆட்வேர்ட்ஸ் (Google Adwords) விளம்பரங்கள், இணையத்தைப் பயன்படுத்துவோரால் சொடுக்கப்படுகையில், கூகிளுக்கு வருமானம் கிடைக்கிறது. இந்த விளம்பரங்களை, உங்கள் தளத்திலும் வெளியிடுவதன் மூலம், கூகிளுக்குக் கிடைக்கும் வருமானம் அதிகரிக்கிறது. அதில் ஒரு பகுதி, உங்களுக்கு (அதாவது இணைத்தளத்தின் உரிமையாளர்களுக்கு) பகிர்ந்தளிக்கப்படுகிறது.

கூகிள் ஆட்சென்ஸில் (Google Adsense) உறுப்பினராவது எப்படி?

உங்களுக்கென்று ஒரு இணைத்தளம் மட்டும் இருந்தால் போதும். கூகிள் ஆட்சென்ஸ் (Google Adsense) விளம்பரங்களை வெளியிடுவது இலவசம்தான். இதற்காக கூகிள் நிறுவனத்திற்கு நீங்கள் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. கூகிள் ஆட்சென்ஸ் கூறும் விதிமுறைகளின் படி உங்களது இணைத்தளமானது இருக்கவேண்டும். தகுதி அளவீடுகளைப் பூர்த்தி செய்யவேண்டும். இவை இரண்டும் இருப்பின் நீங்கள் உங்கள் இணைத்தளத்தில் கூகிள் ஆட்சென்ஸ் (Google Adsense) விளம்பரங்களை வெளியிட விண்ணப்பிக்கலாம். அந்நிறுவனம், உங்கள் விண்ணப்பத்தைப் பரிசீலித்து, உங்களுக்கு அனுமதி வழங்குவதா இல்லையா என முடிவு செய்யும். நீங்கள் விண்ணப்பித்த ஒரு வார காலத்துக்குள் அனேகமாக, உங்கள் விண்ணப்பம் ஏற்கவோ, நிராகரிக்கவோ படலாம். உங்கள் விண்ணப்பம் ஏற்கப்படின், நீங்கள் கூகிள் ஆட்சென்ஸ் கணக்கைத் தொடங்கலாம். பின்னர், உங்களுக்கு ஒரு 'HTML Code' வழங்கப்படும். அக்குறியீட்டு எண்ணை, உங்களது தளங்களில் நீங்கள் பயன்படுத்தினால், கூகிள் தன்னிடம் உள்ள சிறந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, உங்கள் தளத்தின் தலைப்பு, அதன் உள்ளடக்கம் இவற்றுக்குத் தொடர்புடைய விளம்பரங்களை உங்கள் தளத்தில் காட்சிப்படுத்தும். ஒரு சொடுக்கலுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்பது கூகிளுக்கு மட்டுமே தெரிந்த இரசியம். அது ஒரு சென்ட் ஆகவும் இருக்கலாம், பத்து டாலராகவும் இருக்கலாம்.

கூகிள் ஆட்சென்ஸ் கூறும் விதிமுறைகள் என்னென்ன?

1. உங்களுக்கு என்று ஒரு இணைத்தளமோ (Website), வலைப்பூவோ (Blogspot) இருக்கவேண்டும். இது வரை இல்லையென்றால் இனிமேல் நீங்கள் ஒன்றை உருவாக்கிக் கொள்ளலாம். (ஆனால், சில நேரங்களில் உங்கள் இணைத்தளம் அல்லது வலைப்பூ உருவாகி ஆறுமாதமாவது ஆனால்தான்,கூகிள் ஆட்சென்ஸ் கணக்கைத் துவக்க முடியும். குறிப்பாக சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த தளங்கள்.)
2. உங்கள் வயது பதினெட்டுக்கு மேற்பட்டிருக்கவேண்டும்.
3. கூகிள் ஆட்சென்ஸ் நிறுவனத்தின் சில நெறிமுறைகளை மீறாமல் இருக்கவேண்டும். (இவற்றை விரிவாகப் பின்னர் காணலாம்.)

உங்கள் கணக்கைத் துவக்குவது எப்படி?

முதலில் கூகிள் ஆட்சென்ஸுக்கு நீங்கள் உறுப்பினராவதற்காக விண்ணப்பிக்கவேண்டும். உங்கள் முழுப்பெயர் (உங்கள் சான்றிதழ்களில், உங்கள் வங்கிக்கணக்கில் உள்ளபடி), உங்கள் முழு முகவரி, உங்கள் இணைத்தளத்தின் முகவரி (URL), இவை அனைத்தையும் கொடுக்கவேண்டியிருக்கும். கூகிளின் விதிமுறைகளை மீறமாட்டேன் என்ற உறுதிமொழி கொடுக்கவேண்டும். உங்கள் தளம் கூகிளின் நெறிமுறைகளை மீறாமல் இருப்பின், உங்களுக்கு முன்னால் கூறியபடி ஒர் எண் கொடுக்கப்படும். உங்கள் தளத்துக்கு வருபவர்கள் மட்டுமே விளம்பரங்களைச் சொடுக்கவேண்டும். நீங்களே உங்கள் விளம்பரங்களைச் சொடுக்கினால் அது விதிமுறை மீறல். அப்படிச் செய்பவர்களின் கணக்கை கூகிள் ஆட்சென்ஸ் முடக்கிவிடும்.

உங்கள் கணக்கில் பத்து டாலர்கள் சேர்ந்தபின், உங்கள் முகவரியைச் சரிபார்க்கும் விதமாக, கூகிள் உங்களுக்கு PIN எண்ணை தபால் மூலமாக அனுப்பும். அந்த எண்ணை நீங்கள் உங்கள் கணக்கில் பதிவு செய்தல் மூலம் உங்களுடைய முகவரி சரிபார்க்கப்படுகிறது. கூகிளில் இருந்து நீங்கள் பணப்பட்டுவாடா ஆக இது அவசியம்.

ஒவ்வொரு முறையும் உங்கள் கூகிள் கணக்கில் குறைந்தபட்சமாக 100 டாலர்கள் சேர்ந்தபின், உங்களுக்கு 'கூகிள் நிறுவனத்தில் இருந்து காசோலை அனுப்பப்படும். ஆனால் உடனடியாக அல்ல. உங்கள் கணக்கில் மார்ச் மாதம் 20ம் நாள் இருப்புத்தொகை நூறு டாலர்களைத் தாண்டினால், அது பரிசீலிக்கப்பட்டு, (விதிமுறை மீறல்கள் உள்ளதா இல்லையா என்று), ஏப்ரல் மாதம் கடைசியில் உங்களுக்குப் பணப்பட்டுவாடா செய்யப்படும். உங்கள் பணம் கைக்கு வர மே மாதம் 10 முதல் 15 தேதி ஆகிவிடக்கூடும். நீங்கள் கூகிள் ஆட்சென்ஸ் கணக்கைத் துவக்குகையில் கொடுத்த முகவரிக்குக் காசோலை அனுப்பப் படும்.

கூகிள் ஆட்சென்ஸ் விதிமுறைகள் என்னென்ன?

உங்கள் தளத்தில் உள்ள விளம்பரங்களை நீங்களே சொடுக்குதல் கூடாது. அதே போல், நீங்களே உங்கள் தளத்திற்கு வருபவர்களை, விளம்பரங்களைச் சொடுக்குமாறு கூறுதல், உங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலம் விளம்பரங்களைச் சொடுக்கச் செய்தல் இவையும் நெறிமுறைகளுக்குப் புறம்பானவை. உங்கள் தளத்திற்கு வருபவர்களுக்கும், விளம்பரங்களைச் சொடுக்குபவர்களுக்கும் சரியீடு செய்தல், விளம்பரங்களுக்குப் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு, விளம்பரங்களைச் சொடுக்க வகை செய்தல் இவையும் நெறி முறைகளை மீறியவையே! இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களுடைய கணக்கை கூகிள் ஆட்சென்ஸ் முடக்கிவிடக்கூடும். உங்கள் தளம் ஆபாசம், வன்முறை, இன,மொழி, நிற வெறிகளைத் தூண்டுவதாக இருப்பின், உங்கள் தளத்தை கூகிள் ஆட்சென்சுக்குப் பயன்படுத்த முடியாது.

கூகிள் ஆட்சென்ஸ் குறித்த மேலும் பல தகவல்களுடன், மீண்டும் சந்திப்போம்.