திங்கள், 28 பிப்ரவரி, 2011

அறிவோம்! பயணக் காப்பீடு' பற்றி.....





`பயணக் காப்பீடு' (டிராவல் இன்சூரன்ஸ்) பற்றி நம்மில் பலருக்குத் தெரியாது. தெரிந்த சிலரும், `அது ஏன் வீண் செலவு?' என்று அலட்சியப்படுத்திவிடுகிறார்கள்.

`பயணக் கட்டணம், அது இது என்று ஏற்கனவே நிறைய செலவு செய்தாகிவிட்டது. இந்நிலையில் இந்தச் செலவு வேறா? நாம்தான் பயணத்துக்கு பக்காவாகத் திட்டமிட்டிருக்கிறோமே, என்ன தவறாகப் போய்விடப் போகிறது?' என்று பயணக் காப்பீடு பற்றி அறிந்தவர்கள் கூட அதில் கவனம் செலுத்தாது விட்டுவிடுகிறார்கள்.

ஆனால், சுற்றுலா அல்லது வேறு விஷயமாகப் பயணம் செய்யும் அனைவருக்குமே பயணக் காப்பீடு மிகவும் பயனுள்ளது. அதற்காகச் செலவழிக்கும் தொகை, பயணத்தில் நீங்கள் எதிர்பாராத பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும்போது கைகொடுக்கும். குறிப்பாக நீங்கள் விடுமுறையில் வெளிநாடு சென்றிருக்கும்போது ஏதாவது `எமர்ஜென்சி' ஏற்பட்டால் இது பயன்தரும்.

பயணம் மேற்கொள்ளும் எவரும் `பயணக் காப்பீடு' பெறுவது என்பது நல்ல யோசனை என்கிறார்கள் ஆலோசகர்கள். இக்காப்பீட்டின் குறிக்கோள், உங்களைப் பயமுறுத்தி பாக்கெட்டை பதம் பார்ப்பது அல்ல. பயணத்தின்போது திடீரெனத் தாக்கும் பிரச்சினைகள் உங்கள் பயணத்தின் இனிமையைக் குலைத்துவிடாமல் காப்பது, பொருள் இழப்பு ஏற்படும் நிலையில் அதைக் குறைப்பது.

உள்நாட்டுப் பயணங்கள், வெளிநாட்டுப் பயணங்கள் இரண்டுக்குமே காப்பீடு பெறலாம். நம் நாட்டு எல்லைக்குள் பயணம் செய்தால் உள்நாட்டுக் காப்பீடும் (டொமஸ்டிக் இன்சூரன்ஸ்), நாடு தாண்டிப் பறக்கும்போது வெளிநாட்டுக் காப்பீடும் (ஓவர்சீஸ் இன்சூரன்ஸ்) பெறலாம்.

பயணக் காப்பீட்டில் பிரதானமாக இரண்டு வகைகள் உள்ளன. அவை, நம் நாட்டுக்கு எல்லைக்குள் பயணம் செய்யும்போது பெறும் உள்நாட்டுக் காப்பீடு (டொமஸ்டிக் இன்சூரன்ஸ்), நாடு தாண்டிப் பறக்கும்போது பெறும் வெளிநாட்டுக் காப்பீடு (ஓவர்சீஸ் இன்சூரன்ஸ்).
 
அடிக்கடி வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வோர், அனேகப் பயணக் காப்பீடு (`மல்டி டிரிப் கவர்') பெறலாம். ஒருமுறை பெறும் இந்தக் காப்பீட்டை அதன் காலகட்டம் முடியும் வேளைகளில் புதுப்பித்துக் கொண்டால் போதும். குழுக் காப்பீடும் உண்டு. குடும்பமாக வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும்போது அது பயனுள்ளதாக இருக்கும்.    ``நிறுவனங்கள் சார்பாகவும், சுற்றுலாவாகவும் வெளிநாடு களுக்குப் பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், நடப்பு ஆண்டில் வெளிநாட்டுப் பயணக் காப்பீட்டுப் பிரிவு 20 சதவீதம் வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது காப்பீட்டு நிறுவனங்களுக்கு லாபமளிக்கும் பிரிவு. காரணம், இதில் `கிளெய்ம்' விகிதம் 40 சதவீதம் அளவுக்கு இருக்கிறது'' என்று காப்பீட்டுத் துறையைச் சார்ந்த கரண் சோப்ரா கூறுகிறார்.
விழிப்புணர்வு வேண்டும்

பயணக் காப்பீட்டின் பயன்கள் அதிகம் என்றபோதும் அதுபற்றிய விழிப்புணர்வு பொதுமக்களிடம் குறைவாக உள்ளது என்று இத்துறை சார்ந்தவர்கள் கூறுகின்றனர். ``பயணக் காப்பீட்டுத் துறை ஆண்டுக்காண்டு 15 சதவீதம் அளவுக்கு வளர்ந்து வருகிறது என்றபோதும், இன்றும் 5-ல் ஒருவர்தான் இக்காப்பீட்டைப் பெறுகின்றனர். பயணக் காப்பீடு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் நாங்கள் பிரபல கிரெடிட் கார்டு நிறுவனம், பள்ளிகள் ஆகியவற்றுடன் இணைப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளோம். இணையதளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் அதிகமாக விளம்பரம் செய்து வருகிறோம்'' என்று மற்றொரு முன்னணி காப்பீட்டு நிறுவனத்தின் உயர் அதிகாரி தெரிவிக்கிறார்.

``பயணக் காப்பீடு, `சீசன்' சார்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. இதைப் பெறுவோர் எண்ணிக்கை மே- ஜூலை மாத காலகட்டத்திலும், நவம்பர்- ஜனவரி மாத காலகட்டத்திலும் அதிகரிக்கிறது. இந்தியாவில் இந்தக் காப்பீட்டைப் பெறுவோர் குறைவாக இருப்பதற்குக் காரணம், நம் நாட்டில் இருந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும், மற்ற அண்டை நாடுகளுக்கும்தான் அதிகமானவர்கள் பயணம் செய்கின்றனர். அவர்களின் பயணம் சராசரியாக 4 முதல் 7 நாட்களில் முடிந்துவிடுகிறது. எனவே இந்தக் குறுகிய காலப் பயணத்துக்கு ஏன் காப்பீடு பெற வேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள்'' என்று மற்றொரு ஆலோசகர் கூறுகிறார்.

பயணக் காப்பீட்டுக்கான பிரீமியம் என்பது அதைப் பெறுபவரின் வயது, பயண கால அளவு, செல்லும் இடம், எவ்வளவு தொகைக்கு காப்பீடு பெற விரும்புகிறார் என்பன போன்ற விஷயங்களைப் பொறுத்தது.    பயணத்துக்கு `புக்' செய்யும்போது, பயணக் காப்பீட்டுக்கும் ஏற்பாடு செய்துகொள்ளலாம். நீங்கள் ஒரு `டிராவல் ஏஜன்டின்' மூலம் பயணச்சீட்டுக்கு `புக்' செய்கிறீர்கள் என்றால், நீங்களே பயணக் காப்பீடு பாலிசியை வாங்கலாம் அல்லது `டிராவல் ஏஜன்டை' வாங்கித் தரும்படி கூறலாம். பல்வேறு வகையான பயணிகளுக்கு அதற்கேற்ற பயணக் காப்பீடு கிடைக்கிறது. மாணவர்களின் கல்வி தொடர்பான பயணம், தொழில்ரீதியான பயணம், சுற்றுலாப் பயணம், சாகசப் பயணம் என்று ஒவ்வொன்றுக்கும் அதற்கேற்ற காப்பீட்டைப் பெறலாம்.

தற்போது பெரும்பாலும் பயணச்சீட்டுகள் `ஆன்லைன்' மூலமாக `புக்' செய்யப்படுகின்றன. எனவே பயண இணையதளங்கள், பயணக் காப்பீடு வழங்குவது தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுகின்றன.

நீங்கள் எந்த இணையதளத்தின் வழியாக பயணச்சீட்டுக்குப் பதிவு செய்கிறீர்களோ, அதிலேயே பல்வேறு வகையான பயணக் காப்பீட்டு வாய்ப்பு விவரங்கள் தெரிவிக்கப்பட்டிருக்கும். குறிப்பிட்ட இணையதளம் எந்தக் காப்பீட்டு நிறுவனத்துடன் இணைப்புக் கொண்டிருக்கிறதோ, அந்த நிறுவனத்தின் `பாலிசி' இருக்கும். நீங்கள் மற்ற நிறுவனங்களின் பயணக் காப்பீட்டு பாலிசிகளுடன் ஒப்பிட்டுத் தேர்வு செய்வதற்கு அங்கு வசதி இருக்காது. ஆனால் இணையதளம் மூலமாக குறிப்பிட்ட பாலிசியைத் தேர்வு செய்யும்முன் அதற்கான விதிகள், நிபந்தனைகளைப் படித்துத் தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள். பல்வேறு காப்பீட்டு நிறுவனங்களின் இணையதளங்கள் மூலமாகவும் நீங்கள் பயணக் காப்பீட்டைப் பெறலாம். `கிரெடிட் கார்டு' மூலமாகவோ, `டெபிட் கார்டு' மூலமாகவோ நீங்கள் கட்டணத்தைச் செலுத்தலாம். விமானத்தில் ஏறுவதற்கு முன்புகூட கட்டணத்தை செலுத்த முடியும். பயணக் காப்பீட்டை `ஏஜன்ட்' மூலம் பெற்றாலும், `ஆன்லைன்' மூலம் பெற்றாலும் கட்டணத்தில் எந்த வித்தியாசமும் இராது.

``பயணக் காப்பீட்டைப் பெறும்போது கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், செல்லும் இடத்துக்கு ஏற்ப சரியான தொகைக்குக் காப்பீடு பெறுவது. சர்வதேசப் பயணங்களுக்கான காப்பீட்டுப் பிரிமீயம் என்பது மொத்தச் செலவில் 1 முதல் 2 சதவீதம் என்ற குறைவான அளவுதான். பல்வேறு காப்பீட்டு இணையதளங்களில் புகுந்து பார்த்தால் உங்களுக்குத் தேவையான, சரியான பயணக் காப்பீட்டை அறியலாம்'' என்று ஒரு காப்பீட்டு ஆலோசகர் கூறுகி றார்.

பயணக் காப்பீட்டின் அவசியத்தை அறிந்துவிட்டீர்கள். இனி, பயணம் மேற்கொள்ளும்போது அதுகுறித்து யோசிப்பீர்கள்தானே?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக