புதன், 26 ஜனவரி, 2011

கண் புரை நோயை கண்டு பயப்பட வேண்டாம்!






பொதுவாக கண்களில் வரும் நோய்களில், வயதானவர்களுக்கு காணப்படுவது கண்புரை. இதை ஆங்கிலத்தில், "காட்டிராக்ட்' என்பர். கண்களில் உள்ள லென்ஸ், ஒளி அனுப்பும் தன்மையை இழக்கிறது. இதனால், கண்பார்வை குறைகிறது. பிறந்தது முதல், கண் லென்ஸ் ஒளிக்கதிர்களை விழித்திரைக்கு அனுப்பி, கண் பார்வை தருகிறது. கண்புரை ஏற்பட்டபின் இது மாறுபடுவதால், பார்வை குறைவு ஏற்படுகிறது. கண் புரை நோய், 40 வயது முதல் துவங்கலாம். முதலில், தூரப்பார்வை குன்றுதல், வாகனங்கள் ஓட்டுவதில் சிரமம் மற்றும் பார்வை தன்மை குறைபாடு ஆகியவை உண்டாகும். கண்ணாடி நம்பர் அடிக்கடி மாறக்கூடும். இவ்வாறு ஏதேனும் பிரச்னை இருந்தால், கண் மருத்துவரிடம், கண் புரை நோய் இருக்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கண் புரையை, அறுவை சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும். இப்போது பல நவீன கண் புரை அறுவை சிகிச்சை முறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. "போகோயெமல்சிபிகேஷன்' எனும் முறை மூலம், முழுமையாக கண் புரையை நீக்கி விடலாம்.

இந்த முறையில், தையல் போடுவதில்லை மற்றும் வெறும் ஐந்து நிமிடங்களில் அறுவை சிகிச்சை நிறைவு பெறும். மேலும், தையல் இல்லாத முறைகள் கையாளப்படுகின்றன. இதை, "மைக்ரோ இன்சிஷன் காட்டராக்ட் சிகிச்சை '(MICS) என அழைப்பர். முன்காலத்தில், ஒருநாள் மருத்துவமனையில் தங்கி, அறுவை சிகிச்சை செய்வது போல், இப்போது இல்லை. மருத்துவமனையில் தங்காமல், "டேகேர்' முறை மூலம் சிகிச்சை செய்யலாம். கண் புரை அறுவை சிகிச்சை செய்யும்போது, "இன்ட்ரா ஆகுலர் லென்ஸ்' பொருத்தப்படும். இது, நமது இயற்கையான லென்ஸ் செய்யும் வேலையை செய்வதற்காக பொருத்தப்படுகிறது. "இன்ட்ரா ஆகுலர் லென்ஸ்' அல்லது செயற்கை லென்ஸ் அறுவை சிகிச்சை, அனைவருக்கும் பொருந்தும். இன்ட்ரா ஆகுலர் லென்ஸ் பல வகைப்படும். "மோனோ போகல்' எனப்படும் இன்ட்ரா ஆகுலர் லென்ஸ், தூரப் பார்வைக்கு உதவும். இதனால், தூரப் பார்வை தெளிவாக தெரியும். கிட்டப் பார்வையும் தெரியும். ஆனால், சிறிய எழுத்துக்களை படிக்கவோ அல்லது பார்க்கவோ, கண்ணாடி தேவைப்படும். "மல்டிபோகல்' எனப்படும் இன்ட்ரா ஆகுலர் லென்ஸ், தூரப் பார்வை மற்றும் கிட்டப் பார்வை இரண்டிற்கும் உதவும். இதனால், அறுவை சிகிச்சைக்கு பின் கண்ணாடி தேவை குறைந்துவிடும். கண் புரை அறுவை சிகிச்சையில் தேவைப்படும் இன்ட்ரா ஆகுலர் லென்ஸ் வகை, ஒருவரின் கண்களின் தன்மை மற்றும் வயது போன்றவையை மனதில் கொண்டு மருத்துவர்கள் தீர்மானிக்கின்றனர். பெரும்பாலும், வயதானவர்களுக்கு மட்டும் தான் கண் புரை வரும் என்றாலும், குழந்தைகள், இளம் பருவத்தினர்களுக்கும் வர வாய்ப்பு உள்ளது. பிறவி நோய், வளர்ச்சி வேறுபாடு மற்றும் ஊட்டச்சத்து அல்லது ரசாயன வேறுபாடு காரணமாகவும், பிறக்கும் குழந்தைக்கும் இது வரலாம். கண்களில் அடிபடுவதாலும், கண் புரை வரலாம். "யுவியைட்டிஸ்' எனப்படும் கண் நோய், நீண்ட காலமாக குணப்படுத்தாமல் இருந்தாலும், கண் புரை ஏற்படும். வேறு நோய்களுக்கு உட்கொள்ளும் மருந்துகளாலும் வரலாம். எதுவாக இருந்தாலும், கண் புரை நோய் சிறு வயதில் வந்தால், உடனே சிகிச்சை செய்வது நல்லது. அறுவை சிகிச்சைக்கு முன், நீர்ப்பை நிலை, ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், கருவிழியின் செல் நிலை, கண் அழுத்தம் ஆகியவை பரிசோதிக்கப்படும். அறுவை சிகிச்சைக்கு பின், ஒரு மாதம் வரை சொட்டு மருந்துகள் போட வேண்டும். சிலருக்கு, அறுவை சிகிச்சைக்கு பின்னரும் கண்ணாடி பவர் வருவது உண்டு. அவ்வாறு உள்ளவர்கள், கண்ணாடி அணிய வேண்டும்.

மேலும் தொடர்புக்கு:

ராதா ராணி: 98400-49349
பத்மப்ரியா: 98414-33162
டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை,
19, கத்தீட்ரல் சாலை,
சென்னை-86. 044-28112811.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக