புதன், 1 செப்டம்பர், 2010

இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?

இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?




make-money-online











வீட்டில் இருந்தபடியே இணையத்தளத்தின் மூலமாகப் பணம் சம்பாதிக்க முடியும் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். 'ஐந்தாயிரம் கட்டினால் மாதம் ஐம்பதாயிரம் வரை சுலபமாகச் சம்பாதிக்கலாம் என்ற உள்ளூர் விளம்பரங்கள் தொடங்கி, டாலர்களில் பணத்தை இணைத்தளத்தில் செலுத்தச் சொல்லும் பன்னாட்டு விளம்பரம் வரை ஏராளமான கவர்ச்சிகரமான விளம்பரங்களை எங்கெங்கும் பார்க்கிறோம்.

ஆனால் உண்மையிலேயே இணைத்தளத்தின் மூலம் சுலபமாகச் சம்பாதிக்க முடியுமா? முடியுமெனில், எப்படி? எங்கிருந்து தொடங்குவது என்பதில்தான் பலருக்கும் குழப்பம். இந்த விஷயத்தில் பொதுவாக இரண்டு விதமான மாயைகள் நிலவுகின்றன. ஒன்று 'அடிப்படைக் கணிணி அறிவை மட்டும் வைத்துக்கொண்டு நம்மாலெல்லாம் இணைத்தளத்தில் சம்பாதிக்கவே இயலாது' என்று தீர்மானிப்பது. இரண்டு 'விளம்பரங்களில் வருவது போல் பலருக்கு மின்னஞ்சல் அனுப்புவது, விளம்பரங்களைச் சொடுக்குவது போன்றவை மூலமாகவே சுலபமாக ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்று நம்புவது'. இவை இரண்டுமே இரண்டு துருவத்தைச் சேர்ந்தவை.

இணையத்தின் மூலம் கண்டிப்பாகப் பணத்தைச் சம்பாதிக்க முடியும். இதில் சந்தேகமே இல்லை. இதற்கு கணிணியில் நிபுணத்துவம் பெற்றிருக்கவேண்டும் என்ற தேவையுமில்லை. அதே சமயம் அது பணங்காய்ச்சி மரத்தினை உலுக்கிப் பணத்தை எடுத்துவருவது போல் மிகச் சுலபம் என விளம்பரங்கள் சொல்வதும் வடிகட்டின பொய்தான்.

முதலில் ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். Easy Money என்று எதுவும் கிடையாது. உழைப்பில்லாமல் சம்பாதிப்பது என்பது கனவில் மட்டுமே நடக்க முடியும். நேர்மையாக, நாணயமாக ஆனால் உழைப்பின்றிப் பணத்தைச் சம்பாதிப்பது என்பது இயலாது. அதுவும், இணைத்தளத்தில் நீங்கள் சம்பாதிக்கவேண்டுமெனில் விடாமுயற்சியும் பொறுமையும் அவசியம். நீங்கள் கணிணித் தொழில்நுட்ப வல்லுனராக இருந்தால், ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் செலவிட்டால் ஒருவேளை போதுமானதாக இருக்கக் கூடும். சாதாரணமான 'கணக்கியல்', 'Data Entry' பணிகள், வலைத்தளபராமரிப்புப் பணிகள் இவற்றைச் செய்பவரானால், தொடர்ச்சியாகப் பணி செய்தால்தான் பணம் சம்பாதிக்க முடியும்.

ஆயினும், நீங்கள் உண்மையான ஆர்வத்தோடும், அக்கறையோடும் உழைத்தால், வீட்டில் இருந்தபடியே ஆயிரக்கணக்கில்கூட சம்பாதிக்கலாம். சொல்லப்போனால், மென்பொருள் நிறுவனத்தில் வேலைபார்க்கும் உங்கள் நண்பரை விடக்கூட அதிகமாகவே உங்களால் சம்பாதிக்க முடியும். அதற்கு வழிகாட்டுவதுதான் இக்கட்டுரைத் தொடரின் நோக்கம்.

இணையத்தில் சம்பாதிக்க என்னென்ன தேவை? ஏதாவது நிறுவனத்திற்குப் பணம் கட்டி ஆலோசனை பெறவேண்டுமா? கண்டிப்பாகத் தேவையில்லை. இவ்வளவு பணம் அனுப்புங்கள்... நீங்கள் இணையத்தில் சம்பாதிக்க நாங்கள் கற்றுத்தருகிறோம் என்று யாராவது சொன்னால் நம்பாதீர்கள்.
உங்களுக்குத் தேவையானதெல்லாம் நல்ல,விரைவாகப்பணியாற்றும் ஒரு கணிப்பொறி, இணைத்தள இணைப்பு, அடிப்படைக்கணிணி அறிவு, கற்றுக்கொள்ளும் ஆர்வம், கொஞ்சம் பொறுமை, நிறைய அக்கறை, கடின உழைப்பு இவைதான். இவையெல்லாம் இருக்கின்றன என்று நினைக்கிறீர்களா? இப்பொழுது நாம் மேற்கொண்டு செல்லலாம்.

இணைத்தளத்தின் மூலமாகச் சம்பாதிப்பதில் என்னென்ன வசதிகள்?

ஒன்று: சுதந்திரம் - நீங்களே முதலாளி, நீங்களே தொழிலாளி. விரும்பும் நேரத்தில், விரும்பும் இடத்தில் இருந்து பணி செய்யலாம். போக்குவரத்து அலைச்சல் இல்லை. வெளியூருக்குச் சென்றிருந்தாலும், உள்ளூரில் இருந்தாலும் தடைப்படாமல் வேலை செய்யலாம்.

இரண்டு : வருமானம் - இவ்வளவுதான் சம்பளம், இவ்வளவு நேரம்தான் வேலை என்பது இல்லை. உங்கள் சம்பாத்தியத்தை நீங்களே தீர்மானிக்க முடியும். உடல் நலமும் உற்சாகமும் ஊக்கமும் இருந்தால் உங்கள் வருமானத்தில் எல்லையும் விரிந்துகொண்டே போகும். உங்கள் திறமை, ஒதுக்கும் நேரம், உழைப்பு, கற்றுக்கொள்ளும் வேகம் இவற்றைப் பொறுத்து உங்கள் வருமானமும் அதிகரிக்கவோ குறையவோ செய்யலாம்.

மூன்று: அபாயமின்மை: சொந்தமாக நீங்கள் ஒரு தொழில் தொடங்கினால், அதில் எத்தனையோ அபாயங்கள் உண்டு. சிக்கல்களும் உண்டு. நீங்கள் முதல் போடவேண்டும். தொழில் தொடங்க அனுமதி வாங்கவேண்டும். சந்தைப்படுத்துதல், உற்பத்தி செய்தல் என்று பல உண்டு. நீங்களே எல்லாவற்றையும் செய்ய இயலாது என்பதால் பணியாளர்களை நியமிக்க வேண்டும். நட்டமேற்பட்டாலோ, கடனாளியாகிவிட நேரும் அபாயம் உண்டு. இணைத்தளம் மூலம் தொழிலில் இறங்குகையில் குறைவான பணம் போதுமானது.

நான்கு: வளரும் தேவை: இணைத்தள சந்தை வளர்ச்சியடைந்து கொண்டே செல்கிறது. பலதரப்பட்ட பொருட்களும் இணைத்தளத்தில் விற்பனை ஆகின்றன. மக்கள் நீண்ட தூரம் சென்று அலைந்து திரிந்து வாங்குவதை விட, இணைத்தளத்தின் மூலம் வாங்குவது வசதியானது, எளிமையானது என்று கருதத் தொடங்கிவிட்டனர். பல நிறுவனங்களும், வேலைக்கு ஆள் எடுப்பதை விட, சுயேச்சையாக இணைத்தளத்தில் பணிபுரிபவர்களிடம் வேலையைக்கொடுப்பது லாபகரமானது என்று எண்ணுகிறார்கள். இதனால், சந்தைப்படுத்துதல், கணிணிப்பணிகளுக்கான வேலை வாய்ப்பு கூடிக்கொண்டே இருக்கிறது.

ஐந்து: கற்றலில் எளிமை: நீங்கள் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்குச் சேரவேண்டுமெனில் படிப்புக்கான சான்றிதழ்கள் வேண்டும். ஒரு கணக்கியல் துறையில் பணி வேண்டுமென்றால் அதற்குப் படித்திருக்கவேண்டும். ஆனால், இணைத்தளத்தில் கற்றுக்கொள்வதும் எளிது, உங்களுக்குப் பணி கொடுப்பவர்களும் உங்கள் வேலைத்திறனைப் பார்ப்பார்களே தவிர தகுதிச் சான்றிதழ் கேட்க மாட்டார்கள். சராசரித் திறனும், கற்பதில் விருப்பமும் உள்ள என் நண்பர், (இணைத்தளத்தினை மின்னஞ்சல் பார்ப்பதற்கு மட்டும் பயன்படுத்தி வந்தவர்) ஓரிரு வருடங்களாக வலைப்பணி புரிகிறார். மென்பொருள் நுட்பம் எதுவும் அவருக்குத் தெரியாது. ஆனால் இன்று இணைத்தள நிர்மாணங்கள், பராமரிப்பு இவற்றின் மூலமாக மாதம் பல ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார். இது மிகைப்படுத்தப் பட்டதில்லை. உண்மையான உண்மை.

ஆறு: அதிக வேலை வாய்ப்பு: நீங்கள் விற்பனையாளராக இருந்தால், உலகத்தில் எந்த மூலையில் இருப்பவருக்கும் பொருளை விற்பனை செய்யலாம்.பணி புரிபவராக இருந்தால், எந்த நாட்டில் இருப்பவருக்காகவும் பணி புரியலாம். உங்கள் வட்டம் விரிவடைவதால் வாய்ப்புகளுக்கும் பஞ்சம் இருப்பதில்லை.

ஏழு: ஒரே விதமான வேலையை சலிப்படையும் வரை திரும்பத்திரும்பச் செய்யவேண்டுவதில்லை. அதே போல், பணம் சம்பாதிக்க ஒரே ஒரு வழி முறையைப் பயன்படுத்தவேண்டியதும் இல்லை. இணையத்தில் நேர்மையாகப் பணம் சம்பாதிக்க எண்ணற்ற வழிகள் உள்ளன. (தொடரும் கட்டுரைகளில் நாம் ஒவ்வொன்று பற்றியும் விரிவாகக் காணலாம்). இதனால் பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் பெருகுகின்றன.

இணைத்தளத்தில் சம்பாதிக்கும் வழிகள் பலவற்றைப்பற்றியும், இப்பகுதியில் தொடர்ந்து காணலாம்.

2 கருத்துகள்:

  1. நன்மைகளை அறிந்து கொண்டேன் பயனடைவது எப்படி?

    பதிலளிநீக்கு
  2. நல்ல முயற்சி.
    ஆனால் ஆங்கிலப்புலமை இல்லாதவர்களுக்கு இது பயன்படுமா?

    பதிலளிநீக்கு