ஞாயிறு, 24 அக்டோபர், 2010

தேடுதலுக்கான சுருக்கு வழிகள்

தேடுதலுக்கான சுருக்கு வழிகள்

நாம் பல இணைய தளங்களில் தகவல்களைத் தேடுகிறோம்.  கூகுள் மட்டுமின்றி, பிங், பேஸ்புக், யு–ட்யூப், இ–பே போன்ற பிற தளங்களிலும் தகவல்களைத் தேடுகிறோம். இந்த தேடுதல்களின் போது, நாம் விருப்பப்படாத அல்லது தவிர்க்க விரும்பும் தகவல்கள் மற்றும் கோப்புகள் குறித்த முடிவுகள் நமக்குக் கிடைக்கும். இதனால் நம் நேரம் மட்டுமின்றி இதற்கான கட்டணமும் வீணாகும். இந்த தேடல்களில் நம் தேடல் முறைகளைச் சற்றுக் கவனத்துடன் கையாண்டால், நேரம் வீணாவதனைத் தடுக்கலாம். தேடல் முறைகளில் சில சுருக்கு வழிகளை இதற்கெனக் கையாளும் வழிகளை இங்கு பார்க்கலாம்.

கூகுள் தேடுதளம்:

1. குறிப்பிட்ட தளத்திற்குள்ளாகத் தேட: உங்களுடைய இணைய தகவல் தேடலை, ஒரு குறிப்பிட்ட தளத்திற்குள் மேற்கொண்டால் போதும் என விரும்புகிறீர்களா?  அவ்வாறென்றால், (தேடுதல் கேள்வி/சொல்) தளம்: (தளப்பிரிவு) என அமைக்கவும். எடுத்துக்காட்டாக,  computer tips  தினமலர் தளத்தில் தேடிப் பெற வேண்டும் எனில்: computer tips site:www.dinamalar.com   என அமைக்கலாம். இதிலும் தினமலர் தளத்தில் கம்ப்யூட்டர் மலர் தளப்பக்கங்களில் மட்டும் எனில் computer tips
site:www.dinamalar.com/computermalar  என அமைக்க வேண்டும்.

2.சில வகைக் கோப்புகளில் மட்டும்: உங்கள் தகவல்கள் ஒரு சில பி.டி.எப். வகைக் கோப்புகளில் மட்டும் உள்ளது என எதிர்பார்க்கிறீர்கள். அல்லது டாகுமெண்ட் வகைக் கோப்புகளை மட்டும் தேடிப் பார்க்க எண்ணுகிறீர்கள். இந்த வகையினும் வரையறை செய்திடலாம். computertips filetype:pdf  எனத் தர வேண்டும். இந்தக் கட்டளைக்கு தேடும் தகவல்கள் உள்ள பி.டி.எப். பைல்கள் மட்டுமே தேடிக் காட்டப்படும். இதே போல்  ps, doc, ppt, xls, rtf  ஆகிய வகை கோப்புகளையும் வரையறை செய்து தேடலாம். இது போல இன்னும் பலவகை கோப்புகளையும் அடிப்படையாகக் கொண்டு தேடலாம்.

3.முடிவுகளை விலக்க:  சில வகை முடிவுகள் உங்கள் தேடலுக்கு விடையாக இருக்க நீங்கள் விரும்பவில்லை. அவை குறித்து ஏற்கனவே உங்களுக்குத் தெரியும் என்றால், அவற்றை விலக்கி முடிவுகளைத் தருமாறு கட்டளை வரியினை அமைக்கலாம். எடுத்துக் காட்டாக ஆப்பிள் நிறுவன தளத்தில் தகவல்களைத் தேடுகிறீர்கள். அப்போது ஐ–பேட் குறித்த தகவல்கள் உங்களுக்கு வேண்டாம் எனில், அதனை விலக்கி கட்டளை வரி அமைக்கலாம். Apple -iPad  என அமைக்க வேண்டும். இத்துடன் மேலே குறித்த சில கட்டளைகளையும் இணைத்து அமைக்கலாம். Apple -iPad -site:apple.com  என்றும் Apple -iPad -PDF   எனவும் பயன்படுத்தலாம்.

4.உள்ளூர் தகவல் மட்டும்: சில வேளைகளில் உள்ளூர் தகவல் மட்டும் தேவைப்படலாம். மதுரையில் என்ன நேரம் என அறிய வேண்டுமா? time [madurai]   என டைப் செய்து தேடவும். சீதோஷ்ண நிலை அறிய weather [madurai]  என டைப் செய்திடலாம்.

5. அலகு மாற்றம்: அளவுகளின் அலகுகளை மாற்றி அறிய, ஒரு நாட்டின் கரன்சி மதிப்பினை இன்னொரு நாட்டின் கரன்சி மதிப்பில் அறியவும், தேடல் கட்டளைகளைச் சுருக்கிப் பயன்படுத்தலாம்.  7 inches in cm மற்றும்  30 Euros in USD எனத் தரலாம்.

பிங் தேடுதளம்:

1.குறிப்பிட்ட பைல்வகை பெற: தேடும் பொருள் குறித்த சிலவகை பைல்களை பிங் தேடுதளத்தில் பெற [தேடும் சொல்] contains [ பைல்வகைசி எனத் தரவும். எடுத்துக்காட்டாக rahman contains mp3 என டைப் செய்தால், ரஹ்மான் பாடல்களில் எம்பி3 பார்மட் உள்ளவை மட்டும் கிடைக்கும். இதே போல  WMA, PDF, AAC, DOC, ஆகிய பைல்களையும் தேடிப் பெறலாம்.

2. பின்புல படம் நீக்க: பிங் தேடுதளம் மிகவும் அழகாகத்தான் உள்ளது. ஆனால் அதன் போட்டோக்கள் நம்மை திசை திருப்புகின்றன. http://www.bing.com/?rb=0 என்ற முகவரியில், எதுவும் இல்லாத பிங் தேடுதளம் கிடைக்கும்.

இதே போல அல்லது இது போன்ற வழிகளில் மற்ற தேடுதளங்களிலும், நம் தேடல் முறைகளில் சில வரையறைகளை உருவாக்கி, தேடல் நேரத்தை மிச்சப்படுத்தி, நமக்கான முடிவுகளை நாம் விரும்பும் வகையில் பெறலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக