ஆங்கிலத்தில் அதிவேகமாக எழுத வேண்டும் என்ற ஆசை இருந்து ஆனால் அதற்கு ஈடு கொடுக்கக் கூடிய ஆங்கில புலமை இல்லையே என்ற ஆதங்கமும் இருந்தால் கவலையே வேண்டாம். அழகான ஆங்கிலத்தில் டைப் செய்ய உதவும் இணைய சேவை ஒன்று இருக்கிறது. ஏஐ டைப் என்னும் இந்த சேவை சுலபமாக, வேகமாக, சிறப்பாக டைப் செய்ய உதவுகிறது.
அடிப்படையில் இந்த சேவையானது கம்ப்யூட்டரில் டைப் செய்ய உதவும் நோட்பேட் அல்லது வேர்டுபேட் போலதான். ஆனால் இதில் டைப் செய்யத் துவங்கும் போதுதான் இதன் மகத்துவமே தெரியும். டைப் செய்பவர்கள் முழுவதும் டைப் செய்ய வேண்டும் என்ற அவசியமே இல்லாமல் டைப் செய்யத் துவங்கும் போதே அந்த சொல் என்னவாக இருக்கும் என்று காட்டப்பட்டு விடுகிறது. சரியான சொல் என்னும் பட்சத்தில் அதனை கிளிக் செய்தாலே போதும். கூகுல் போன்ற தேடியந்திரங்களில் தேடலுக்கான சொல்லை டைப் செய்ய முற்படும் போதே இந்த சொல் தானா என்று பரிந்துரைக்கப்படுகிறது அல்லவா? அதே போல இந்த டைபிங் சேவையும் முன்கூட்டியே வார்த்தைகளை பரிந்துரைக்கிறது. வார்த்தைகள் மட்டுமல்ல, பல நேரங்களில் முழு சொற்றொடரையுமே பரிந்துரைக் கிறது.
உதாரணத்திற்கு கடிதம் எழுதுகின்றீர்கள் என வைத்து கொள்வோம். மதிப்பிற்குரிய ஐயா என்று துவங்கியதுமே கடிதத்தின் நோக்கத்தை புரிந்து கொண்டு முழு சொற்றொடரும் திரையில் தோன்றும். இதன் காரணமாக நாம் நினைத்ததைவிட வேகமாக டைப் செய்து விடலாம். அதை விட முக்கியமாக இலக்கண பிழையின்றி டைப் செய்யலாம்.
வாசகங்களாகவே பரிந்துரைக்கப்படுவதால் சரியான வரியை தேர்வு செய்து கொண்டாலே போதும். திஸ் வருமா தட் போட வேண்டுமா என்றெல்லாம் குழம்பிக் கொண்டிருக்க வேண்டாம்.
அதே போல வார்த்தைகளை பிழையின்றியும் தேர்வு செய்து கொள்ளலாம். டைப் செய்து முடித்த பின் பிழைத் திருத்தியை பயன்படுத்தி சரி பார்க்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. அடிக்கும் போதே சரியானதாக தானே தேர்வாகிறது. எழுத்து பிழையும் இல்லை, இலக்கணப் பிழையும் இல்லை என்ற நம்பிக்கையோடு சொல்ல வந்த விஷயத்தில் தெம்பாக கவனம் செலுத்தலாம். அதே போல ஏதாவது சொல்லில் சந்தேகம் இருந்தாலும் அதனை சரி பார்த்துக் கொள்ளலாம். அது மட்டுமா டைப் செய்பவரின் தேவை மற்றும் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப முதலிலேயே பல்வேறு அம்சங்களை நிர்ணயித்து கொள்ள முடியும். எழுத்து நடையையும் கூட தேர்வு செய்வது சாத்தியம். அலுவல் நிமித்தமான நடையா, சட்ட ரீதியான மொழியா, இளமை துள்ளலான வார்த்தைகளா என்றெல்லாம் கூட தீர்மானிக்க முடிவது உண்மையிலேயே சூப்பர். எல்லாவற்றையும் விட முக்கியமாக எழுதும் போது எந்த விதத்திலும் குறிக்கீடாக அமையாத வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
செயற்கை அறிவு என்று சொல்லப்படும் அர்டிபிஷியல் இன்டலிஜனஸ் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சேவையானது எழுதப்படும் விஷயத்தின் அர்த்தத்தை உணர்ந்து வார்த்தைகள் மற்றும் வாசகங்களை பரிந்துரைப்பதால் இதனை பயன்படுத்தும் போது புதிய சொற்களை கற்றுக் கொண்டு ஒருவரின் சொற் வங்கியை வளமாக்கி கொள்வதும் சாத்தியமே. ஆங்கிலத்தில் அதிக பரிட்சயம் இல்லாமல் அடிப்படை விஷயம் மற்றும் அறிந்தவர்களுக்கு ஆங்கிலத்தில் எழுத்து மூலமாக தொடர்பு கொள்ள இந்த சேவை மிகவும் உதவும்.
இந்த சேவையை அவுட்லுக் இமெயில் மற்றும் நோட்பேட், வேர்டுபேடிலும் இணைத்துக் கொள்ளலாம். இந்த சேவையில் மொழிபெயர்ப்பு வசதியும் இருப்பது கூடுதல் சிறப்பு. டைப் செய்யப்பட்ட வரிகளை தாய்மொழியில் மாற்றிக் கொண்டு பொருளும் நடையும் சரியாக இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளலாம்.
இப்போதைக்கு 13 மொழிகளுக்கான மொழிபெயர்ப்பு வசதி இணைக்கப்பட்டுள்ளது. டைப் செய்வது இதை விட சுலபமாக இருக்க முடியாது என்று ஏ ஐ டைப் சொல்லிக் கொள்வது உண்மைதான் என்பது இதனை பயன்படுத்தி பார்த்தால் புரியும்.
http://www.aitype.com/
career jankari
பதிலளிநீக்கு